கேரள மாநிலத்தின் திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் காங்கோ காய்ச்சல் எனப்படும் ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இந்த காய்ச்சல் காணப்படுகிறது. இது வளர்ப்பு விலங்குகள், வனவிலங்குகள் மற்றும் மனிதரையும் தாக்கவல்லது. மனிதருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ் 30 சதவிகிதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருச்சூருக்கு வந்த ஒருவர் காங்கோ காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலருக்கும் காங்கோ காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் சுகாதார துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கேரளாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதால் இதுபோன்ற காய்ச்சல்கள் பரவும் வாய்ப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.