காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் ஆதரவால் கட்சிக்குள் குழப்பம்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கும் 370ஆவது பிரிவை நீக்கும் அறிவிப்பை நாடாளுமன்றத்தில் எதிர்க்காமல் நேரு குடும்பத்தினர் அமைதியாக இருந்ததும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரே 370ஆவது பிரிவின் நீக்கத்தை ஆதரிப்பதும் அக்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

1954ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படக் காரணமாக இருந்தவர் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ஜவஹர்லால் நேரு. நேற்று ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், நேருவின் குடும்பத்தில் இருந்து வந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி – ஆகிய மூவரும் இது குறித்து நாள் முழுக்க வாயே திறக்கவில்லை. ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் போன்ற சிலரே மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அவர்களது விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்களே ஆதரிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் ‘பிரிவு 370 நீக்க’த்துக்கு எதிராக காங்கிரஸ் மேலிடம் கருத்து தெரிவித்த நிலையில், காங்கிரஸின் முடிவை எதிர்த்து அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா புவனேஸ்வர் காலிடா தனது எம்.பி. பதவியையே ராஜினாமா செய்தார். இது காங்கிரஸ் கட்சியை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜனார்த்தன் திவேதி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை வரவேற்றதுடன், ‘வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டது’ – என்றும் கருத்து தெரிவித்து உள்ளார். அதாவது காங்கிரஸின் முன்னாள் பிரதமர் நேரு செய்தது தவறு என மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இன்னொரு மூத்த தலைவரான ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபேந்திர ஹூடா ‘21ஆம் நூற்றாண்டில் 370ஆம் சட்டப் பிரிவுக்கு இடம் இல்லை’ – என்று சொல்லி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை வரவேற்று உள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் தகவல் தொடர்புத்துறை மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா தனது டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சியையும், ஜம்மு காஷ்மீரில் அமைதியை காக்கவும், காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவும், காஷ்மீர் பண்டிட்களுக்கு நீதி கிடைக்கவும் 370ஆவது பிரிவின் நீக்கத்தை அனைவரும் கட்சி பேதங்களைக் கடந்து ஆதரிக்க வேண்டும்’ – என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு எடுத்துள்ள முடிவு மிக சரியானது என உத்தரபிரதேச மாநிலத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் நேரு குடும்பம் காலம் காலமாக கோலோச்சும் ரேபரேலி பகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினரானவர்.

Exit mobile version