தூத்துக்குடியில், உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால் தெற்கு மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி மற்றும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியைக் குறிவைத்து ஒரே குடும்பத்தைச் சேந்தவர்கள் களம் இறங்கி உள்ளனர். திமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவைச் சேர்ந்த உமரிசங்கர் மாவட்ட ஊராட்சியின் 12 ஆவது வார்டு திமுக வேட்பாளராகவும், அவரது மனைவி பிரம்மசக்தி 15ஆவது வார்டு திமுக வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஒட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்காகச் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் மனைவி சுகிர்தா 15 ஆவது வார்டிலும், சண்முகையாவின் சகோதரிகள் முத்துலட்சுமி 14ஆவது வார்டிலும், ஜெயலட்சுமி 16ஆவது வார்டிலும், முத்துலட்சுமியின் மகன் ஒன்றாவது வார்டிலும் திமுக வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.
தி.மு.க போட்டியிடும் 19 வார்டுகளில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது அப்பகுதி திமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.