திருவள்ளூர், திருவண்ணாமலை நகரங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் ஒன்றரை டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூரில் ஒரு கிடங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பதுக்கி வைதுது விற்பனை செய்வதாக நகராட்சி ஆணையர் மாரிச்செல்விக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துப் பல்வேறு நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று அங்குச் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஒரு டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கிடங்கின் உரிமையாளருக்கு 20 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் இனிமேல் பிளாஸ்டிக் பொருட்களை விற்கக் கூடாது என எச்சரித்தனர்.
திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முபாரக் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உறைகள், தேநீர்க் கோப்பைகள் ஆகியவற்றைப் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 500 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்ததுடன் அந்தக் கிடங்கை மூடி முத்திரையிட்டனர். கிடங்கின் உரிமையாளர் முபாரக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.