திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்ந்தும், கொச்சைப்படுத்தியும் பேசிய விவகாரத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆ.ராசாவை கண்டித்தும், தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வரும் திமுகவினருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அஇஅதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆஸ்பயர் சுவாமிநாதன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை தரக்குறைவாக பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள் குறித்து இழிவாக பேசுவதை ஒரு காலமும் அனுமதிக்க முடியாது என்றார்.
அதேபோல ஆ.ராசாவுக்கு உலகத் தமிழர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். லண்டனில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தாயை மதிக்கத் தெரியாத திமுகவினர் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் தலைமையில், ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அயனாவரத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர் மன்னிப்பு கேட்கும்வரை விடமாட்டோம் என்றும் கூறினர்.