மேட்டுபாளையத்தில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் பசுந்தீவனங்களை காட்டிலும் கலவை சாத உருண்டைகளை ஆர்வத்துடன் விரும்பி உண்பது காண்போரை கவரும் விதத்தில் இருந்தது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் பதினான்காம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கோவில்களிலிருந்தும் 28 யானைகள் கலந்து கொண்டுள்ளன. காலையில் யானைகள் குளித்து முடித்தவுடன் முகாமில் உள்ள உணவு கூடத்திற்கு அழைத்து சென்று மெகா சைஸ் சாப்பாட்டு உருண்டைகளை யானைகளுக்கு பாகன்கள் கொடுக்கின்றனர். பாகன்கள் கைகளால் உருட்டி உருட்டி ஊட்டிவிடும் இந்த சாத உருண்டைகளை, யானைகள் எவ்வித மறுப்பின்றி விரும்பி உண்ணும் காட்சிகள் காண்போரை கவரும் விதத்தில் இருந்தது. கலவைசாதஉருண்டையில் அரிசி சாதத்தோடு நன்கு வேக வைக்கப்பட்ட பச்சைப்பயறு, கொள்ளு, ராகி, மஞ்சள், கருப்பட்டி, தாது உப்புக்கள் ஆகியவை கலக்கப்படுவதாலேயே, யானைகள் கலவை சாதங்களை விரும்பி உண்பதற்கு காரணம் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.