சிவகங்கை மாவட்டம் கீழடி நடைபெற்று வரும் 5வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி இன்றுடன் நிறைவு பெற்றது. ஆறாம் கட்ட அகழ்வாய்வு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பாக கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி துவங்கப்பட்ட 5வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளின் போது 52 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கட்டுமான சுவர்களும் 800-க்கும் அதிகமான பொருட்களும் கிடைத்தன. குறிப்பாக சுடுமண்ணால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கிடைத்தன. இவை அனைத்தும் பல நூற்றாண்டுகள் பழைமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. பருவ மழை பெய்தாலும் பணிகள் ஏதும் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 5 வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றது. கடந்த ஒரு வாரமாகவே சுற்றுலா பயணிகள் அதிகளவில் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். ஆறாவது கட்ட ஆய்வு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ம் கட்ட ஆய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.