தளர்வில்லா முழு ஊரடங்கு… எங்கே தெரியுமா?

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக வார இறுதி நாளில் தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் முதலிடத்தில் கேரளா உள்ளது. அங்கு, கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் வார இறுதி நாள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த 20ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு தளர்வுகளை கேரள அரசு அறிவித்தது.

இதையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 22 ஆயிரத்து 56 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக வார இறுதி நாளான வரும் 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, தேசிய நோய் தொற்று கட்டுப்பாட்டு மைய இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவை கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தெரிவித்துள்ளார்.

இந்த குழு, கொரோனா பரவலுக்கான காரணம் மற்றும் நோய் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்கும் என்றும் மன்சுக் மாண்டாவியா கூறியுள்ளார்.

Exit mobile version