அதிமுக வேட்பாளரை திமுகவினர் மிரட்டிய வீடியோ ஆதாரத்துடன் புகார்

அதிமுக வேட்பாளரை, திமுகவினர் மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெறவைத்த குற்றச்சாட்டில், திருத்தணி 18ஆவது வார்டு தேர்தலை ரத்து செய்ய அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி 18ஆவது வார்டில் அண்ணா திமுக வேட்பாளராக வாணிஸ்ரீ, திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் பூபதியின் மனைவி சரஸ்வதி ஆகிய இருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி நாளில், அதிமுக வேட்பாளர் வாணிஸ்ரீயை, திமுகவினர் மிரட்டி நகராட்சி அலுவலகத்திற்கு கடத்தி சென்று கட்டாயப்படுத்தி வேட்புமனுவை வாபஸ் பெற வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநில தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ரமணா, அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் பாபு முருகவேல் ஆகியோர் புகார் அளித்தனர்.

அப்போது அதிமுக வேட்பாளரை திமுகவினர் மிரட்டிய வீடியோ ஆதாரத்தை அவர்கள் வழங்கினர்.இதுகுறித்து திருத்தணி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திமுகவினரின் குளறுபடியால் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது போல், திருத்தணி நகராட்சி 18ஆவது வார்டு தேர்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தி உள்ளது.

Exit mobile version