அரக்கோணம் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்து இல்லாததால், நோயாளிகளின் உறவினர்களை தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்கிவரச் சொல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்று ஏற்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு ஏற்கெனவே மருத்துவர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மருந்து பற்றாக்குறையும் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கான மருந்துகளை, தனியார் மருந்தகங்களில் வாங்கிவரச் சொல்லி உறவினர்களிடம் நிர்பந்திக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அவ்வாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், அரக்கோணத்தில் கிடைக்காத பட்சத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சென்று வாங்கும் நிலைக்கு ஆளாவதாகவும், தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேபோன்று கொரோனா நோயாளிகள், சி.டி ஸ்கேன் எடுக்க தனியார் மைங்களுக்கு அனுப்பப்படுவதால், அங்கு கட்டணக் கொள்ளை நடைபெறுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.