இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வீடுகளை கட்டிக் கொடுக்காமல் ஏமாற்றி பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக தோனி செயல்பட்டுள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்வதற்காக சிறப்புக் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது. இந்தக் குழு ஆய்வுசெய்து, சமர்ப்பித்துள்ள அறிக்கையில், தோனியின் மனைவி ஷாக்ஷி, அந்நிறுவனத்தின் கீழ் வரும் மற்றொரு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பதும், இந்த நிறுவனங்கள், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தோனி அவரது மனைவியிடம் விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் போர் கொடி தூக்கியுள்ளனர்.