கடலூர் மாநகராட்சியில் விசிகவை சேர்ந்த துணை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி திமுக மற்றும் பாமகவை சேர்ந்த 22 கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளது, கூட்டணியில் இருந்து விசிகவை கழட்டிவிட திட்டமா? என்ற பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாநகராட்சி திமுக மேயர் சுந்தரி ராஜா சாதி துவேஷத்துடன் நடந்து கொள்வதாக விசிகவை சேர்ந்த துணை மேயர் தாமரைச் செல்வன் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான வேலைகளில் திமுக கவுன்சிலர்கள் ஈடுபட்டிருப்பது கடலூர் மாநகராட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த சுந்தரி ராஜாவும், துணை மேயராக விசிகவை சேர்ந்த தாமரைச்செல்வனும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, சாதி ரீதியாக செயல்படுவதாக கூறி வாரப் பத்திரிக்கை ஒன்றிற்கு துணைமேயர் தாமரைச் செல்வன் பேட்டி அளித்திருந்தார். இது, கடலூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், துணை மேயர் தொடர்ந்து மேயருக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அனைத்து வார்டுகளிலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டி திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 22 வார்டு கவுன்சிலர்கள் கடலூர் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் அந்த மனுவில் துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனால் கடலூர் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் நிகழ்ந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தின்போது தங்களது கோரிக்கைகளைக் கூட மேயர் கேட்பதில்லை என்று திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக கோஷம் எழுப்பிய சூழலும் நிலவியது. இப்படி மேயருக்கு எதிராக சொந்தக்கட்சியினரே இருக்கும் நிலையில் தற்போது விசிக துணைமேயருக்கு எதிராக புகார் கடிதம் கொடுத்திருப்பவர்கள் மேயருக்கு வேண்டியவர்கள் என்றும் அவரது தூண்டுதலின் பேரில்தான் இப்படி செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் கூட்டணியில் இருந்து விசிகவை கழட்டிவிடும் திமுக தலைமையின் எண்ணமும் பிரதிபலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. திருச்சி மாநகராட்சியில் சாதி ரீதியாக இருக்கை ஒதுக்கி திமுக மேயர் நடந்து கொள்வதாக விசிகவை சேர்ந்த கவுன்சிலர் புகார் கூறியிருந்த நிலையில், கடலூரில் விசிக துணைமேயரின் பதவியை பறிக்க திட்டமிட்டிருப்பது திமுக கூட்டணிக்குள் நிலவும் கூட்டணிக் குழப்பத்தை வெளிச்சம்போட்டு காட்டி வருகிறது.