ராகுல்காந்தி குடும்பத்துக்கு சொந்தமான 3 அறக்கட்டளைகள் மீது புகார் – விசாரணை நடத்த தனிக்குழு!

நிதிமுறைகேடு புகாரில் ராகுல்காந்தி குடும்பத்துக்கு சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரணை நடத்த, மத்திய அரசு தனிக்குழுவை நியமித்துள்ளது. 1991ம் ஆண்டு ராஜீவ்காந்தி அறக்கட்டளையும், 2002ம் ஆண்டு ராஜீவ்காந்தி சாரிடபிள் டிரஸ்டும் தொடங்கப்பட்டது. இந்த அறகட்டளைகள் இரண்டும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ராகுல்காந்தி குடும்பத்துக்கு சொந்தமான 3 அறக்கட்டளைகளில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. நிதி பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை சிறப்பு இயக்குநர் தலைமையில், மத்திய உள்துறை அமைச்சகம் தனிக்குழுவை நியமித்துள்ளது. எனினும் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தங்கள் அறக்கட்டளைகள் மீது புகார் கூறப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version