உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
பொங்கல் பண்டிகையை அடுத்து வரும் 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஏராளமான காளைகள் பங்கேற்கின்றன. இதையொட்டி காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அதன் உரிமையாளகள் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை துவங்கியுள்ளது. இதையடுத்து கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் காலை முதலே காளைகளும் அதன் உரிமையாளர்களும் குவியத் துவங்கியுள்ளனர்.
மருத்துவர்களும் காளைகளை சோதனை செய்து வருகின்றனர். காளைகளின் பல் முதலியவற்றை சோதனை செய்து காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படுகிறது.