வெளி மாநிலங்களில் சென்று பணியாற்றும் தொழிலாளர்களை கண்காணிக்க குழு

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை கண்காணிக்கவும், அவர்களை மீட்டு வரும் நடவடிக்கையை மேற்கொள்ளவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நஜிமுதீன், செல்வி அபூர்வா மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் விசுவநாதன், மைதிலி ராஜேந்திரன் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்றவர்களை கண்காணிக்கவும், தேவையான உதவிகளை மேற்கொள்ளவும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெயஸ்ரீ ரகுநந்தன், விஜயராஜ் குமார், மதுமதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, ஐஏஎஸ் அதிகாரிகள் குமரகுருபரன், பாஸ்கர பாண்டியன், தீபக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று, மாநில அளவில் ஒருங்கிணைப்புக் குழு, நோய் தொற்று கண்காணிப்பு, நோய் தொற்று தடம் அறிதல் மற்றும் தனிமைப்படுத்தல், சுகாதார உட்கட்டமைப்பு, அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்பது, அத்தியாவசிய பொருட்கள் விநியோகித்தை கண்காணிப்பு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு, புலம்பெயர் தொழிலாளர்களின் நலன், மூத்த குடிமக்களின் தேவையை அறிவது உள்ளிட்ட 11 ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Exit mobile version