கொடநாடு வங்கி மேலாளர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் ஆகியோர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர். வங்கி மேலாளரிடம் வங்கி கணக்கு விவரங்கள் குறித்தும், உதவியாளர் பூங்குன்றனிடம் கொடநாடு எஸ்டேட் பத்திரபதிவு குறித்தும், ஆணையம் கேள்விகள் எழுப்பி இருந்தது.
இந்நிலையில் கொடநாடு முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் விசாரணை ஆணையம் முன்பு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஆணையத்தில் பீட்டர் ஜோன்ஸ் ஆஜராகி உள்ளார். அவரிடம் கொடநாடு சொத்து விவரங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்ப ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் 2 பேர் இன்று ஆஜராகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் நாளமில்லா சுரபி நிபுணர் நிக்கில் டேண்டன் மற்றும் இதய நிபுணர் தேவ கவுரவ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை போக்க பல்வேறு முக்கிய நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.