கோவை – மேட்டுப்பாளையம் இடையே மெமு ரயில் சேவை தொடக்கம்

கோவை – மேட்டுப்பாளையம் இடையே இன்று முதல் மெமு ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை – மேட்டுப்பாளையம் இடையே முப்பது ஆண்டுக்காலமாக டீசல் எஞ்சின் மூலம் பயணியர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் அது மின்சார ரயிலாக மாற்றப்பட்டதை அடுத்துப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து. இதை அடுத்து மெமு ரயில் போக்குவரத்தைத் தொடங்க அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் முப்பது ஆண்டுகளாக இயக்கபட்ட பயணியர் ரயில் சேவை நேற்றுடன் நிறுத்தப்பட்டது. இன்று முதல் கோவை – மேட்டுப்பாளையம் இடையே மெயின்லைன் எலக்ட்ரிக் மல்ட்டிபிள் யூனிட் எனப்படும் மெமு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கபட்ட இந்த அதிநவீன ரயிலில் இரண்டு பக்கமும் எஞ்சின் உள்ளது. எட்டுப் பெட்டிகள் கொண்ட இந்த ரயில் 614 பேர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வகையிலும் 1781 நின்று கொண்டு பயணிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் பாதுகாப்புக்காக 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து மெமு ரயில் காலை 8.30 மணிக்குக் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றது.

புதிய மெமு ரயில் போக்குவரத்து தொடங்கியதால் மகிழ்ச்சியடைந்த பயணிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

Exit mobile version