ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 250 கோடி ரூபாயில் கட்டப்படும் புதிய ரெயில்வே பாலத்துக்கு தூண் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. நூற்றாண்டினை கடந்து மிகவும் பழமையான பாலமாக உள்ளதால் பாம்பன் கடலில் புதிதாக ரெயில்வே பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தன. சோதனை முயற்சியாக பாலம் அமையும் நுழைவு பகுதிகளில் தூண்கள் அமைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில்வே பாலம் கட்டுவதற்கான தூண் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.