பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார், அவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் நெல்லை சிவா, ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
1985ம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கிய ஆண்பாவம் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான நெல்லை சிவா, தொடர்ந்து பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
என் ஆசை மச்சான், உன்னைத் தேடி, வெற்றிக்கொடி கட்டு, சாமி, வின்னர் உட்பட ஏராளமான படங்களில் இவரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.
‘கண்ணும் கண்ணும்’ படத்தில் வடிவேலுவுடன் நெல்லை சிவா நடித்த ‘கிணத்தை காணோம்’ என்ற காமெடி, நெல்லை சிவாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது
நெல்லை வட்டார வழக்கில் வெகு இயல்பான வசன உச்சரிப்புகள் மூலம், தனக்கென தனி நடிப்பு பாணியை உருவாக்கிய நெல்லை சிவாவின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை சிவாவின் உடல் அவரது சொந்த ஊரான பணகுடியில், 12ம் தேதி நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.