கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார் வனப்பகுதியில் விரட்டப்பட்ட காட்டுயானை சின்னத்தம்பி மீண்டும் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் புகுந்துள்ளது.
கோவை தடாகம் பகுதியில் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் புரிந்த காட்டுயானை சின்னத்தம்பியை கும்கி யானையின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் கடந்த 25-ம் தேதி டாப்சிலிப் வனப்பகுதியில் விட்டனர். ஆனால் சின்னத்தம்பி யானை நேற்று அதிகாலை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தின் குடியிருப்புப் பகுதியில் புகுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி ஆழியார் பெருமாள் மலையடிவார வனப்பகுதிக்கு விரட்டினர்.
ஆனால் சின்னத்தம்பி யானை வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பெருமாள் பக்தி என்னும் குடியிருப்புப் பகுதியில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசூர் பகுதிக்கு சென்ற யானையை பின்தொடர்ந்து வனத்துறையினர் சென்றுள்ளனர். யானையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்