சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
மூன்றாம் ஆண்டு மாணவரான சுனில் என்பவரது புகைப்படத்தை, மாஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகக் கூறி சுனில் தரப்பினரும், ஜூனியர் மாணவர்களின் தரப்பினரும் கத்தி, மதுபாட்டில்களால் மோதிக் கொண்டதில் சூர்யா, சூரிய பிரகாஷ், நவீன் ஆகிய மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் ஒரே கல்லூரிக்குள்ளேயே மாணவர்கள் தாக்கிக்கொண்ட சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிறுவயதில் இருந்தே குடும்பச் சூழலாலும், புறச் சூழலாலும் மன அழுத்தங்களுக்கு ஆளாகும் மாணவர்களே, இந்த வயதில் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இதுபோன்று வெளிக்காட்டுவதாக அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
கல்லூரி மாணவர்களின் மனங்களை சரியான வழியில் பக்குவப்படுத்த போதுமான பயிற்சியும், வழிகாட்டுதலும் இல்லாததும் அவர்கள் வன்முறைக்கு திரும்ப காரணமாகிறது. அதே போல, உடனிருப்பவர்கள், வன்முறையை ஊக்குவிக்கும்போது மாணவர்களும் அந்தப் பாதைக்கு செல்ல காரணமாகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். சிறுவயது முதலே பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களை ஒழுங்கு முறையில் செலுத்தினால் இந்த அசம்பாவிதங்களை தவிர்க்கலாம் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அதே நேரத்தில், நாளைய தலைமுறையினரான மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டால், அரசு வேலைக்கோ, தனியார் வேலைக்கு செல்ல முடியாமல் அவர்களின் வாழ்க்கை கேள்விகுறியாகும் என்கிறார்கள் பொதுநல ஆர்வலர்கள்.
கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் அக்கறை காட்டினால் மட்டுமே மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பதும் அவர்களின் எண்ணமாக உள்ளது.
மேலும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் உளவியல் ரீதியான வழிகாட்டுதல்களை கல்வித்துறை செய்ய வேண்டும் என்றும் பொதுநல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாளைய தேசம் மாணவர்கள் கையில். அவர்களை நல்வழியில் செல்ல வைப்பது அரசின் கையிலும் சமூகத்தின் கையிலுமே உள்ளது.
Discussion about this post