திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலை மீட்டு நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் அருகே நன்னிலம் அடுத்துள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓசூரைச் சேர்ந்த முரளி என்பவரது மகள் மைதிலி அந்தக் கல்லூரியில் பி.எட் இரண்டாமாண்டு பல்கலைகழகத்தின் விடுதியிலேயே தங்கி படித்து வந்தார். கடந்த 30 ஆம் தேதி இரவு சக மாணவிகள் சாப்பிடச் சென்ற நேரத்தில் மைதிலி மட்டும் சாப்பிடப் போகாமல், விடுதி அறையிலேயே இருந்தார். மற்ற மாணவிகள் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தபோது அறை பூட்டிய படி இருந்தது. உள்ளே பார்த்த மாணவிகளுக்கு அதிர்ச்சி. காரணம் அறையின் உள்ளே உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டபடி தொங்கிக் கொண்டிருந்தார் மைதிலி. இதைக் கண்ட மாணவிகள் சத்தமிட்டுள்ளனர். அடுத்தடுத்த அறையில் இருந்து ஓடிவந்து மாணவிகள் பார்த்தபோது மாணவி மைதிலி தூக்கு போட்டு இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மத்தியப் பல்கலைகழக நிர்வாகம் சார்பில் நன்னிலம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மைதிலியின் உடலை மீட்டுத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்த மைதிலியின் பெற்றோர் ஓசூரில் இருந்து மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடமும், மாணவிகளிடமும், பல்கலை நிர்வாகத்திடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் இதே போல் பல்கலைக்கழகத்தில் பயின்ற வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் திருவாரூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.