புதுச்சேரியில் காரில் தயார் செய்யப்பட்டுள்ள நடமாடும் நூலகம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த பயனுள்ள வகையில் அமைந்துள்ள நடமாடும் நூலகம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்…
புத்தகங்களை விட சிறந்த நண்பர்கள் இல்லை என்பர். அப்படி ஒரு சிறந்த நண்பனை உருவாக்க தன்னலமின்றி ஒரு முன்னெடுப்பை செய்திருக்கிறது புதுச்சேரியை சேர்ந்த ஒரு தனியார் தொண்டு நிறுவனம்.
திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் பத்ரிநாத். புதுச்சேரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், ‘துளிர் உதவி கரம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். மாணவர்களுக்கு மாற்று வழி கல்வி திறன் குறித்த மாலை நேர பயிற்சி, நூலகம், பெண்கள் மேம்பாட்டு பயிற்சி, பல்லுயிர் பாதுகாப்பு பயிற்சி போன்றவற்றை அளித்து வருகிறார்.
கொரோனா காலத்தில் நூலகங்கள் மூடப்பட்டுள்ள சூழலில் பத்ரிநாத் தனது தந்தையின் நியாபகமாக உள்ள காரை நடமாடும் நூலகமாக மாற்றியுள்ளார். 2 ஆயிரத்து 700 புத்தகங்களுடன் செல்லும் இந்த நடமாடும் நூலகம் மக்கள் கூடும் இடங்களான கடற்கரை சாலை, பூங்கா, பள்ளி கல்லூரி வளாகம், கிராமங்கள் என நாள்தோறும் ஒரு இடத்தில், வாரம் முழுவதும் மாலை நேரங்களில் பயன்பாட்டிற்கு வைக்கப்படுகிறது.
இந்த நடமாடும் நூலகங்கள் மூலம் மொபைல் போன்களுக்கு அடிமைகளாக உள்ள மக்கள் நிச்சயம் அதனை கைவிட்டு புத்தகத்தை படிப்பார்கள் என்றும், வாசிக்கும் பழக்கத்தை நேசிப்பார்கள் என்றும் உறுதி பட கூறுகிறார் பேராசிரியர். அதற்கு, முதல் கட்ட முயற்சியாகவே இந்த நடமாடும் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
கொரோனா கால கட்டத்தில் கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு செல்ல முடியாத நிலையில் தங்களை தேடி வரும் இந்த நடமாடும் நூலகம் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக கல்லூரி மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம் என்றிருந்து விடாமல் எதிர்கால இளைய தலைமுறையினருக்காகவும் சேர்த்து சிந்தித்து காரில் நூலகம் கட்டியுள்ள பத்ரிநாத்தின் இந்த தன்னலமற்ற முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.