கோவையில் 7 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் கனபிரதீப் மற்றும் வனிதா தம்பதியினருக்கு 7 வயது பெண் குழந்தை உள்ளது. திப்பனூர் அரசுப்பள்ளியில் பயின்றுவந்த சிறுமி, விளையாடிக் கொண்டிருந்தபோது, நேற்று முன்தினம் மாலை காணாமல்போனார்.
பெற்றோரின் புகாரின் பேரில் சிறுமியை போலீசார் தேடிவந்த நிலையில், காலை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், நேற்று சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் விஜயகுமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை பிரிவுடன் சேர்த்து போக்சோ பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தனிப்படை போலீசாரும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.