கோவை இரட்டை கொலை வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
2010 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற கோவை துணிக்கடை அதிபரின் குழந்தைகளான சிறுமி முஸ்கான், சிறுவன் ரித்திக் இருவரையும் கார் ஓட்டுநர் மோகன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கடத்திச் சென்றனர். பின்னர் பொள்ளாச்சி அருகே இருவரின் சடலமும் மீட்கப்பட்டதில், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மோகன்ராஜ் காவல்துறையின் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு முக்கிய குற்றவாளியான மனோகரனுக்கு 2012 ஆம் ஆண்டு இரட்டைத் தூக்கு தண்டனை மற்றும் 3 ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பை எதிர்த்து மனோகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தார்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனோகரன் தரப்பு மற்றும் வாதங்கள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், இன்று நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்தது.