கோவை போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவை சிறுமி கொலை வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடையில், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி, 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை, 7 ஆண்டு சிறை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். இந்நிலையில், உயிரிழந்த குழந்தையின் தாயார் நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல் செய்த மனுவில், சந்தோஷ் குமார் ஒருவர் மட்டும் குற்றவாளி அல்ல எனவும், மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக டிஎன்ஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால், அந்தக் குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுமீது மேல் விசாரணை நடத்தவும் நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version