திருச்சியில் முதன்முறையாக நடத்தப்பட்ட விசிறி வால் சேவல்கள் கண்காட்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு திருவிழா நடத்தப்படுவது போல பல கிராமங்களில் சேவல் சண்டையும் நடத்தப்படும். கோவில் திருவிழாக்களிலும், வீட்டு நிகழ்ச்சிகளின் போதும் இவற்றை நடத்தி வந்தனர். இந்தநிலையில், அழிவின் விளிம்பில் இருக்கும் சேவல்களை பாதுகாக்கும் வகையில், திருச்சியில் முதன்முறையாக பாரம்பரிய சேவல்களான கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. இந்த வகை சேவல்கள் அரிதாகி வருவதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் 350-க்கும் மேற்பட்ட சேவல்கள் கண்காட்சிக்காக கொண்டு வரப்பட்டன. கிளி மூக்கு, விசிறி வால், கீரி, கொக்கு வெள்ளை, கருஞ்செவலை, நூலான், மயில் நூலான், மயில் பூதி, பொன்ரம் உள்ளிட்ட சேவல்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.