ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள்

கடந்த வாரம் டிசம்பர் 16 ஆம் தேதி மறைந்த திமுக முன்னாள் தலைவருக்கு சிலை திறப்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அதில் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி எம்.பி. டி.கே. ரங்கராஜன் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், வர இருக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, ராகுல் காந்தியே வருக, நல்லாட்சி தருக என்று பேசியிருக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுலை, ஸ்டாலின் அறிவித்துள்ளது பாஜகைவை எதிர்க்கும் மற்ற கட்சியினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால் இப்போது வரை மற்ற கட்சி தலைவர்கள் ஸ்டாலினின் கருத்தை ஆமோதிக்கவில்லை.

ஸ்டாலினின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த திரினாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி “பிரதமர் வேட்பாளரை அறிவிக்க இது சரியான தருணமல்ல என்றும் தேர்தல் வரட்டும் பின்பு நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்கிறோம் எனவும் பிரதமர் வேட்பாளரை பொருத்தவரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து என்ன முடிவெடுக்கிறதோ அதுவே பதிலாக அமையும் என்று தெரிவித்து இருக்கிறார். இவருடைய கட்சி மக்களவையில் 33 எம்பிக்களை கொண்டிருக்கும் மிகப்பெரிய கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினின் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும் போது ,மம்தா பானர்ஜி, ஷரத் பவார் மற்றும் பல பேர் , வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் யாராவது ஒருவர் பிரதமர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்தால் அதற்காக கூட்டணியில் உள்ள மற்றவர்களுக்கும் அதே கருத்து இருக்க வேண்டும் என அவசியம் இல்லை” என்று சொல்லி இருக்கிறார்.

“பிரதமர் வேட்பாளர் தொடர்பாக 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபிறகே எதிர்க்கட்சிகள் முடிவு செய்யும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்து இருக்கிறார்.

இவையெல்லாம் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின்,
‘மாற்றம் வேண்டும் என்று தான் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தோம். அதில் என்ன தவறு இருக்கிறது என்றும் நாங்கள் முன்மொழிந்தது தவறு என்று யாராவது சொன்னார்களா? என்று கேட்டிருக்கிறார்.

பிரதமர் வேட்பாளரை பொறுத்தவரை ஒரு மாநிலத்தில் இருக்கும் கட்சி தலைவர் அதுவும் சமீபத்தில் தலைவர் பதவிக்கு வந்த ஒருவர் மட்டுமே முடிவு செய்யும் விஷயமல்ல. இது என்ன கட்சி பதவியா? தனக்கு பிடித்த ஒருவரை அறிவிக்க? என்று மாற்று கட்சியினர் கருதுகிறார்கள். குறைந்தபட்சம் தங்களிடம் ஆலோசனையாவது நடத்தி இருக்க வேண்டாமா என்றும் நினைக்கிறார்கள்? எனென்றால் பல மாநிலங்களில் இருக்கும் கட்சி தலைவர்கள் அனைவரும் கட்சியின் தலைவராகவும்,முதல்வராகவும் பதவி வகித்தவர்கள். பிரதமர் வேட்பாளர் குறித்து எப்போது பேச வேண்டும், அறிவிக்க வேண்டும் என்று அனுபவப்பட்டவர்கள். ஆனால் ஸ்டாலினுக்கு அதில் அனுபவம் இல்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது.

மேலும் ராகுல் குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, லண்டனில் இயங்கி வரும் பேக் காப்ஸ் என்ற கம்பெனி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன் என்று தன்னை குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.ஆனால் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

இதுவும் ஸ்டாலின் அறிவிப்புக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Exit mobile version