இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியும், உதவி பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், பரத் அருண், மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. உலக கோப்பை போட்டிக்கு பிறகும் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக தொடர வேண்டும் என்பது பெரும்பாலான வீரர்களின் கருத்தாக உள்ளது.
ரவிசாஸ்திரியின் பதவி காலம் இந்தாண்டு நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரின் பதவி காலம் நீட்டிக்கப்படாது என்று, இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரவிசாஸ்திரியை நீட்டிப்பது தொடர்பாக ஒப்பந்தத்தில் ஏதும் குறிப்பிடப்படவில்லை எனவும் விதிமுறைபடி புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.