கோயம்பேடு தக்காளி "மைதானத்தை திறந்தால் கிலோ ரூ.40-க்கு தக்காளி விற்க தயார்"

கோயம்பேடு சந்தையில், மூடப்பட்டுள்ள தக்காளி மைதானத்தை திறந்தால், ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்க தயார் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ஆண்டு மே மாதம் மூடப்பட்ட கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை, மீண்டும் திறக்கப்பட்டபோது, 86 சென்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ள தக்காளி மைதானம் திறக்கப்படவில்லை.

இந்த மைதானத்தை திறக்கக் கோரி, தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது தக்காளி விலை ஒரு கிலோ 140 முதல்150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், நிலுவையில் உள்ள வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி, நீதிபதி சுரேஷ்குமார் முன்பு, தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சிவா முறையீடு செய்தார்.

அப்போது, மைதானம் மூடப்பட்டதால், வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு சந்தைக்கு வராததால், தக்காளி விலை உயர்ந்துள்ளதாகவும், மைதானத்தை திறந்தால் ஜெய்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகள் வரும்போது, தக்காளி விலையை அதிரடியாக குறைக்க முடியும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.

தக்காளி வரத்து அதிகரித்தால், கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும் என்றும் வழக்கறிஞர் உறுதியளித்தார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார், நிலுவையில் உள்ள வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version