சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 274 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஆயிரத்து 879 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 38 ஆயிரம் களப்பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனைக்கு பின்னரே தெரியவரும் என கூறிய அமைச்சர் ஜெயக்குமார், மக்களின் செயல்பாட்டை பொருத்து தான் ஊரடங்கு அமலில் இருக்கும் என குறிப்பிட்டார்.
சென்னை தண்டையார் பேட்டையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். முழு ஊரடங்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தண்டையார்பேட்டை மண்டலத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற முடிவை அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும், முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் விளக்கமளித்தார்.
இதற்கிடையே, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து நிதித்துறை கூடுதல் செயலாளர் கிருஷ்ணனிடம் மனு அளித்தார். பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தை உடனடியாக திறக்க வேண்டும் எனவும், திருமண மண்டபங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். சென்னையில் மீண்டும் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் எனவும் விக்கிரமாராஜா உறுதி அளித்தார்.
எனவே மருத்துவ வல்லுநர்கள், முதலமைச்சரிடம் அளிக்கும் பரிந்துரையை பொறுத்தே சென்னையில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுமா என்பது தெரியவரும்.
Discussion about this post