பேச்சுவார்த்தை நடைபெற தமிழக முதலமைச்சரே காரணம்: பினராயி விஜயன்

தமிழக – கேரளா இடையே நிலவும் நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வுக் காண பேச்சுவார்த்தை நடைப்பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முக்கியக் காரணம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெறும் விடுதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சென்றனர். அங்குக் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி அவர்களை வரவேற்றார். இதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடைபெறும் விடுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்தார். அப்போது முதலமைச்சருக்குப் பூங்கொத்துக் கொடுத்தும் சால்வை அணிவித்தும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

பின்னர் இரு மாநில முதலமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு சந்தன கட்டையால் ஆன கிருஷ்ணர் சிலையை முதலமைச்சர் பழனிசாமி பரிசாக வழங்கி கவுரவித்தார். அதை ஏற்றுக் கொண்ட கேரள முதலமைச்சர், கேரளாவின் பாரம்பரிய கதக்களி சிலையை தமிழக முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழகம் – கேரள மாநிலங்களின் விவசாயிகளும், பொதுமக்களும் சகோதரர்களாகப் பழகி வருவதாகத் தெரிவித்தார். இரு மாநிலங்கள் இடையே நிலவும் நதிநீர் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் எளிதாகத் தீர்த்துவிட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது பேச்சுவார்த்தை நடப்பதற்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிகளே காரணம் எனவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

Exit mobile version