சென்னை அடுத்துள்ள வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில், 138 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் – மாம்பாக்கம் – கேளம்பாக்கம் சந்திப்பில் 55 கோடி ரூபாய் மதிப்பில் 6 வழிப்பாதை கொண்ட உயர் மட்டப் பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலத் திறப்பு விழாவுக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் புதிய பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் ரூ.30.24 கோடியில் கட்டப்பட்ட பாலங்களைத் திறந்துவைத்ததுடன், சென்னையில் 108.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள பாலங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வண்டலூரில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார். சென்னை கோயம்பேட்டில் ரூ.93.50 கோடியில் கட்டப்படும் உயர்மட்டப் பாலம் டிசம்பர் மாதம் திறக்கப்படும் எனவும், பெருங்களத்தூர் ரயில்வே உயர்மட்டப் பாலப் பணிகளை 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
தாம்பரத்தில் நடந்துவரும் நடைமேம்பாலப் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
பின்னர், புதிதாக திறக்கப்பட்ட பாலத்தின்வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் சென்றார். புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிறகு, பல்லாவரத்தில் ஒன்றரை கிமீ நீளத்துக்கு 82 கோடியே 66 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். அமைச்சர் பென்ஜமின் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.