மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் பழனிசாமி

சேலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது, வாக்களிப்பதற்காக வந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

தமிழகத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களும் தங்கள் ஓட்டுரிமையை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, சேலம் அருகே உள்ள சிலுவம்பாளையம் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்துக்கு குடும்பத்துடன் வந்த முதல்வர் பழனிசாமி, சாமானிய மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

முன்னதாக, ஈரோடு மாட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள குள்ளம்பாளையம் ஊராட்சி உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதேபோல், நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமராக்கி தெற்கு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில், தனது வாக்கினை பதிவு செய்தார்.

Exit mobile version