கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் 24.4 சென்டி மீட்டர் மழை பதிவானது. கனமழை மற்றும் சூறைக்காற்றால் கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வாழைகள் கடும் சேதமடைந்தன. இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேவனாம்பட்டினத்தில் உள்ள நிவாரண முகாமில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். மேலும், முகாமில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மக்களிடம், முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இதனையடுத்து, கடலூர் முதுநகர் துறைமுகப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், மீனவ கிராமங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் குழுவினரிடம் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், மீனவ கிராம மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். ஆய்வின் போது தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் மாவட்ட நிவர் புயல் சிறப்பு அதிகாரி ககன் தீப் சிங் உள்பட பலர் உடனிருந்தனர்.