திமுகவின் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய முதலமைச்சர் 

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி , நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றதாக திமுக தொடர்ந்து எழும்பி வரும் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.

ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் தனது உறவினர்களுக்கு சொந்தமானது என திமுக கூறி வரும் நிலையில், உறவினர் என்பதற்கு என்ன வரைமுறை என்பதை திமுக ஆட்சியின் போது கருணாநிதி வகுத்ததாகவும், அதன்படி ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தினர் தனது நெருங்கிய உறவினர்கள் இல்லை எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி அதே நிறுவனத்திற்கு 74 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் உட்பட சுமார் 10 ஒப்பந்தங்கள் திமுக ஆட்சியிலேயே வழங்கப்பட்டதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். அதிக விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக திமுகவினர் கூறிவரும் குற்றச்சாட்டின் உண்மை தன்மையையும் முதலமைச்சர் அம்பலப்படுத்தினார்.

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க  ரூ. 2.20 கோடி மட்டுமே தற்போது செலவாகும் என திமுகவின் ஆர்.எஸ். பாரதி கூறிவருவதை சுட்டிக்காட்டிய  முதலமைச்சர், ஆனால்  டி.ஆர். பாலு மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, 10 ஆண்டுகளுக்கு முன்பே. ஒரு கிலோ மீட்டருக்கு 8 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது எப்படி என கேள்வி எழுப்பினார். 

தற்போது 50 சதவீதம் அளவு உயர்ந்துள்ள கட்டுமானச் செலவை கணக்கில் கொண்டே ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர்,  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 27.04 கோடி வரை ஒப்பந்தங்கள் வழங்கியுள்ளதை விளக்கினார்.

அதே நேரம் தமிழக நெடுஞ்சாலை துறையோ அதில் இருந்து மிகக் குறைவாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 10.16 கோடி அளவிற்கே ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக விளக்கம் அளித்தார். 

தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்றும் மு.க.ஸ்டாலினை விமர்சித்தார். 

 

 

Exit mobile version