ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், தேர்தல் அறிக்கை தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர், அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என கூறினார்.
மகளிரின் நலனுக்காக, குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ஆயிரத்து 500ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக கூறினார்.
இது மட்டுமின்றி, மேலும் பல அறிவிப்புகள் அதிமுக வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அதிமுக தேர்தல் அறிக்கை பத்து தினங்களாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், அதிலிருந்து கசிந்த சில தகவல்களை கொண்டு, திமுக சில திட்டங்களை அறிவித்ததாக, செய்தியாளர்களின் கேள்விக்கு, முதலமைச்சர் பதிலளித்தார்.
அதிமுக – அமமுக இணைப்பிற்கு சாத்தியமே இல்லை என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், அதிமுவில் இருந்து விலகிச்சென்றவர்கள், மீண்டும் கட்சியில் சேர விரும்பினால், அது குறித்து தலைமைக் கழகம் முடிவு செய்யும் என்றார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வெளியிட்ட இந்த அறிவிப்புகளுக்கு, தமிழ்நாடு முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.