தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகை கடைகள், காய்கறி கடைகள், மருந்துக்கடைகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றை தடுக்க இனி எடுக்க வேண்டிய தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கான படுக்கை வசதி உட்பட அனைத்து வசதிகளையும் கொண்ட சிறப்பு மருத்துவமனைகள் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரச் சந்தைகள் அனைத்தும் 31 ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் எனவும், பெரிய ஜவுளிக்கடைகள், பெரிய நகைக் கடைகள், பல்வகை பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய கடைகள் போன்றவை இன்று முதல் மூடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள்,காய் கனிக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனி கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் இன்று முதல் 31 ஆம் தேதி வரை, பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.