சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றவும் அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். திமுக ஆட்சியில் நிலவிய மின்வெட்டால் தமிழ்நாடே அல்லல்பட்டதை மறக்க முடியுமா? என கேள்வி எழுப்பியிருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், கட்ட பஞ்சாயத்து, ரவுடிகளின் ராஜ்ஜியம், நில அபகரிப்பு, உள்ளிட்ட திமுக முக்கிய புள்ளிகளின் அராஜகம் எல்லோருடைய மனதிலும் பசுமையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
வன்முறையும், அராஜகமும் திமுகவுடன் ஒட்டிப் பிறந்த பிறவி குணங்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் அக்கட்சியினரின் அடாவடிகளும் குற்றச் செயல்களும் தொடர்ந்து கொண்டிருப்பதை செய்திகளில் பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளனர். இத்தகைய மனநிலையில் வாழும் திமுகவினர் சிறிதளவு வெற்றியை சுவைத்தாலும், அதனால் சமூகத்திற்கு ஏற்படும் கேடுகளை யாரேனும் மறுக்க முடியுமா என்றும் குறிப்பிட்டுள்ள அவர்கள், திமுகவினர் தலையெடுத்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு, வாக்காளப் பெருமக்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால அரசு தமிழகத்தை அமைதிப் பூங்காவாய் மாற்றியது என்றும் விலையில்லா அரிசி, மிக்ஸி, கிரைண்டர், கறவை மாடு உள்ளிட்ட எண்ணிலடங்கா உதவிகளை தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்து எல்லோரது வாழ்விலும் வசந்தத்தை வீச செய்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சுட்டிக்காட்டி உள்ளனர். அதிமுக ஆயிரம் காலத்துப் பயிர்; இது என்றென்றும் ஆலமரமாய் நிலைத்து நிற்கும், மக்களுக்கு தொண்டாற்றும் என ஜெயலலிதா கூறியதை குறிப்பிட்டுள்ளனர்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம், எதிர்கால தேவைக்காக காவேரி-கோதாவரி நதிகள் இணைப்பு திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
மக்களின் உண்மைச் சேவகர்களாகிய அதிமுகவின் நற்பணிகள் தொடரவும், தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழவும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிமுக வேட்பாளர்களை வெற்றிப்பெற செய்யுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.