ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் இதனை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், வேளாண் விஞ்ஞானிகள் உள்பட தமிழக அரசின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழகத்தின் சில பகுதிகளில் காணப்படும் வெட்டுக்கிளிகள், பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என தெரிவித்தார்.
நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கண்டறியப்பட்ட வெட்டுக்கிளிகளால் விவசாய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
தமிழக வயல்களில் காணப்படும் உள்ளூர் வெட்டுக்கிளிகளை கண்டு பாலைவன வெட்டுக்கிளிகள் என விவசாயிகள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டார். வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால், அருகில் உள்ள வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளான் பல்கலைக்கழகங்களில் தககவல் தெரிவித்து, ஆலோசனை பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், வெட்டுக்கிளிகளின் புகைப்படத்தை தமிழக அரசின் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்தும் ஆலோசனைகளை பெறலாம் என்றும் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.