கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார கட்டமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் பாதித்த மாவட்டங்களில், ஊரக வளர்ச்சி துறையின் உதவி இயக்குநர்கள் தலைமையில் தூய்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
இக்குழு பாதிக்கப்பட்ட கிராமங்கள் வாரியாக, தூய்மை பணிகளை மேற்கொள்ளவும், ஒவ்வொரு குழுவிலும் 200 தூய்மை பணியாளர்களைப் பிற மாவட்டங்களில் இருந்து அழைத்து செல்லவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
லாரிகள், மின்சார மரவெட்டி, மண்வெட்டி உள்ளிட்ட சாதனங்கள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு சாதனங்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, குப்பைகள் தேங்கி கிடக்கும் சேறு-சகதி போன்றவற்றை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட உள்ளாகவும், தூய்மை பணியில் ஈடுபடுவோருக்கு உணவு மற்றும் இருப்பிட வசதிகளை மாவட்ட ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்வார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.