மு.க.ஸ்டாலின், பொம்மை முதல்வராக செயல்படுகிறார் – எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு !

அரியலூர் மாவட்டத்தில் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களிடையே சிறப்பு உரை ஆற்றினார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த விடியாத திமுக ஆட்சியில் இருபது மாதங்கள் கழிந்துள்ள நிலையில் பெரிதாக மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றும், மு.க. ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என்று விமர்சனம் செய்தார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பேசுகையில் கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது. இந்த விடியாத திமுக ஆட்சியில் இருபது மாதங்கள் கழிந்துள்ளது, கிட்டத்தட்ட , மூன்றில் ஒரு பங்கு ஆட்சிகாலம் முடிந்துவிட்டது, ஆனால் இன்னும் அரியலூர் மாவட்டத்திற்கு எந்தவித நலத் திட்டங்களும் செய்து தரவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். அதனை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களும் ஆமோதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசிய அவர், இந்த குற்றச்சாட்டினை ஸ்டாலின்மீது வைத்தால் கோபம் மட்டும் வந்துவிடுகிறது, இருபது மாத காலங்கள் போட்டோ ஷுட் மட்டும் செய்துகொண்டவரை பொம்மை முதல்வர் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல என்று விமர்சனம் செய்தார்.

டீக்கடைக்கு சென்று டீ சாப்பிடுவார், சைக்கிளில் ஊர் சுற்றுவார், வாக்கிங் செல்வார் இதுதான் இருபது மாதம் காலமாக ஸ்டாலின் செய்த சாதனை ஆகும் என்று எதிர்கட்சித் தலைவர் விமர்சித்தார். நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்த ஸ்டாலின் அதைப்பற்றி தற்போது வாயைத் திறக்கவில்லை, மேலும் பதினைந்து மாணவ, மாணவிகள் இதனால் உயிர் இழந்து இருப்பது வேதனையாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் அவர்கள் தொடர்ந்து கூறினார். இந்த லட்சணத்தில் நீட் தேர்வு ரத்தினை எப்படி செய்ய வேண்டும் என்கிற இரகசியம் உதயநிதிக்கு தெரியும் என்கிறார், அப்படியென்றால் அந்த இரகசியத்தை மக்களிற்கு தெரிவிக்கலாமே என்றும்  மக்களை கவருவதற்காக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்து ஓட்டு வாங்கிய திமுக மக்களைக் கண்டுகொள்ளாமல் அலைக்கழிக்கிறது என்றும் எதிர்கட்சித் தலைவர் அவர்கள் விமர்சித்தார்.

Exit mobile version