ஊரகப் பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழகத்திற்கு பிரதமர் மோடி விருது வழங்கி சிறப்பித்தார்.
காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விழாவில், தமிழகத்திற்காக வழங்கப்பட்ட விருதினை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் 31 ஊரக மாவட்டங்களில் உள்ள 800க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இந்த தூய்மை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கிராமப்புற இந்தியாவிலும், கிராமங்களிலும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என பெருமிதம் தெரிவித்தார். 60 மாதங்களில் 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனைக் கண்டு உலக நாடுகள் வியப்படைந்துள்ளதாக கூறிய பிரதமர், இதற்காக உலக நாடுகள் அனைத்தும் நம்பை பாராட்டி விருது வழங்கி கவுரவிப்பதாக தெரிவித்தார். நீர் சேமிப்பு திட்டத்திற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவிடும் என்று உறுதியளித்த பிரதமர் மோடி, 2022 ஆம் ஆண்டிற்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழித்த நாடு என்ற இலக்கை நாம் அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.