சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் ஆகிய மூன்று இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 4 மணி அளவில் வந்த தொலைபேசி அழைப்பில், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் ஆகிய மூன்று இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிய மர்ம நபர் உடனடியாக இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மூன்று இடங்களுக்கும் விரைந்து சென்று அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில், வெடிகுண்டு பற்றிய தொலைபேசி அழைப்பானது, புரளி என உறுதிபடுத்தப்பட்டது. இதை அடுத்து செல்போனில் அழைப்பு விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்துள்ளது. மாற்றுத்திறனாளியான இவர், குடிபோதையில் மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து திருப்போரூர் காவல்துறையினர் கைது செய்தனர்.