தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்து திட்டத்தால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குடிமராமத்து திட்டத்தின் மூலம், இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 16 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மன்னர் காலத்தில் நடைமுறையில் இருந்த குடிமராமத்து பணிகளுக்கு மீண்டும் உயிரூட்டியுள்ளார். இந்தியாவுக்கே முன் மாதிரியாக திகழும் குடிமராமத்து திட்டத்திற்கு 2016-17 ம் ஆண்டில் சுமார் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2017-18ம் ஆண்டில் 328 கோடியே 95 லட்சம் ஒதுக்கப்பட்டு குடிமராமத்து பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
அதே போல், நடப்பாண்டில் 499 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் 29 மாவட்டங்களில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பருவமழை தொடங்கும் முன்னரே நீர்நிலைகள் செப்பனிடப்பட்டு தயார் நிலையிலிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். குடிமராமத்து திட்டம் மூலம் நீர் நிலைகளை சீரமைக்க பல்வேறு திட்டப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. துல்லியமான திட்டமிடல், மக்களின் பங்கு ஆகியவற்றால் நீர் ஆதாரங்கள் புத்துணர்ச்சி பெற்றுள்ளன. ஒரு துளி மழைநீரும் வீணாகாமல் சேமிக்கப்படுவதால் கடைக்கோடி விவசாயிகளும் தடையின்றி தண்ணீரை பெற்று சம்பா சாகுபடியை தொடங்கி விட்டனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 1 கோடியே 2 லட்சத்து 52 ஆயிரம் ஏக்கரில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 1 கோடியே 18 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக 16 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்பட்டு அதிகளவில் சாகுபடி செய்ய வாய்ப்பு கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
குடிமராமத்து என்ற சரித்திர திட்டத்தினால் உணவு உற்பத்தியில் தமிழகம் 3வது பசுமை புரட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.