அமைதிக்குப் பிறகே குடியுரிமைச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம்

நாட்டில் நிலவி வரும் வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே, தேசிய குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த தேசிய குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பல அரசியல் கட்சிகளும், பொது நல அமைப்புகளும் 60 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன. இதுவரை அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், தேசிய குடியுரிமைத் திருத்த சட்டம் செல்லுபடியாகும் என அறிவிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் வினித் டான்டா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். தனது மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார். அப்போது பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாப்டே, நாட்டில் கடுமையான சூழல் நிலவும் இந்த நேரத்தில், எங்களது உத்தரவுகள் அமைதியைக் கொண்டு வர வேண்டும். ஆனால், தற்போது அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. அதனால், தேசிய குடியுரிமைச் சட்டத்தை முன்வைத்து நாட்டில் நடக்கும் வன்முறைகள் எப்போது ஓய்கிறதோ, அதன்பிறகு, தேசிய குடியுரிமைச் சட்டம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Exit mobile version