குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019 என்ற புதிய மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. நாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்தித்து வரும் இந்தப் புதிய மசோதாவானது வரும் திங்கள் கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கலாக உள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலையில் நாடாளுமன்ற மக்களவையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏற்கனவே இந்தியாவில் அமலில் உள்ள 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவரக் கோரும் மசோதா ஆகும்.
‘குடியுரிமைச் சட்டம்’ என்பது அடிப்படையில், அயல் நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் வாழும் மக்களுக்குக் இந்தியக் குடியுரிமை அளிப்பது குறித்த சட்டம் ஆகும். அந்தச் சட்டத்தில் திருத்தங்களைக் கோரும் இந்தப் புதிய மசோதாவின் மூலம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், பவுத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய 6 மதத்தினருக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க முடியும்.
முன்னர் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் 12 ஆண்டுகள் தங்கி இருந்தால் மட்டுமே அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் – என்ற குடியுரிமை விதி இருந்தது. இந்த மசோதாவில் அந்த விதி தளர்த்தப்பட்டு, இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக வசிக்கும் அயல்நாட்டினர்கள் கூட இந்தியக் குடியுரிமை பெற வகை செய்யப்பட்டு உள்ளது. அதாவது, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் இந்த மசோதா மூலம் குடியுரிமை பெறலாம்.
இந்தக் குடியுரிமைச் சட்டமானது இந்திய அரசியலமைப்பின் 6ஆவது அட்டவணையில் உள்ள பகுதிகளுக்குப் பொருந்தாது. அதாவது அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்கள் வாழும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இந்த மசோதா பொருந்தாது. இவை போலவே ‘இன்னர் லைன் பார்லிமெண்ட்’ அனுமதியைப் பெற வேண்டிய மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் இந்த மசோதா நேரடியாக அமலாகாது.
இந்த மசோதா மூலம், மதப் பிரச்னைகளால் இந்தியாவுக்கு வந்த மக்கள் இந்தியக் குடியுரிமை பெற வழி ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதனால் இந்த மசோதா வரவேற்கப்படுகின்றது.
ஆனால், 6 குறிப்பிட்ட மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு மட்டும் குடியுரிமைக்கான கால அளவைக் குறைத்துள்ள இந்த மசோதாவில் இசுலாமியர்களுக்கு இடமில்லை என்பதால் இந்த மசோதா விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது. குறிப்பாக, 1971ஆம் ஆண்டின் வங்கப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் அசாம் மாநிலத்திற்கு வந்த வங்கதேச இசுலாமியர்களின் இந்தியக் குடியுரிமையை இந்தச் சட்டம் கேள்விக்குறியாக்கி உள்ளது.