குடியுரிமை என்பது மக்களின் உரிமை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அவர்கள் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் கொண்டதாகும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள நாகபுரி பல்கலைக்கழகத்தின் 107-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர்,
நாட்டில் கல்வி நிறுவனங்கள் அதிகரித்து விட்டதாகவும், துரதிருஷ்டவமசமாக, சில கல்வி நிறுவனங்கள், முற்றிலும் வணிக நோக்கத்துடன் செயல்படுவதாக கூறினார். பல்கலைக்கழகங்கள் செங்கற்சூளைகளைப் போன்றதல்ல என்றும் அவை, பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைப் போல் செயல்படக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள், கல்வியை முடித்துக் கொள்வதற்கான இடமல்ல, ஒரு முடிவைத் தேடுவதற்கான இடமாகும் என்று கூறிய நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, சமூகத்துக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனையைத் தரும் இடமாக பல்கலைக்கழகங்கள் உள்ளதாக தெரிவித்தார். பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும், தங்களிடம் இருந்து இந்தச் சமூகம் என்ன எதிர்பார்க்கிறது என்று உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒவ்வொரு குடிமகனுக்கும் துடிப்புடன் செயல்பட்டாக வேண்டிய பொறுப்பு உள்ளதவும் கூறினார்.