மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவோடு குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது…
மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த குடியுரிமை சட்ட மசோதா ஆறு மணி நேர காரசார விவாதத்திற்கு பிறகு நிறைவேறியது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற மசோதாவிற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எந்த மதத்திற்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல என்றும், மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை எனவும் கூறினார். மேலும் பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மத அகதிகள் குடியுரிமை பெற மசோதா அனுமதி அளிக்கும் என்றும் தெரிவித்தார்..
மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சியளிப்பதாகவும், மசோதாவிற்கு ஆதரவளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்..