குடியுரிமைச் சட்ட திருத்தத்தைக் கண்டித்துப் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது

குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி செங்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்துப் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் இன்று போராட்டம் நடத்தப்போவதாகப் பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்காததுடன், அப்பகுதியில் 4 பேருக்கு மேல் கூடினால் சட்டவிரோதம் என அறிவிக்கும் வகையில்144 தடையுத்தரவு பிறப்பித்தது. பிற மாநிலங்களில் இருந்து தலைநகருக்குப் போராட்டக்காரர்கள் வருவதைத் தடுக்கும் வகையில் அரியானாவின் குருகிராமில் இருந்து டெல்லிக்கு வரும் சாலையில் தடுப்புகள் வைத்து மூடப்பட்டது. இதனால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஜாமியா மிலியா, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், மத்திய டெல்லி ஆகிய பகுதிகளில் உள்ள 14 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இத்தனை தடைகளையும் மீறி டெல்லி செங்கோட்டையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்தனர். காவல்துறையினரின் தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்துத் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆயிரக்கணக்கானோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version